ஆழி
>> Saturday 21 November 2009
வெகு நாட்களாகியிருந்தது கடல் பார்க்க என்று போய். சென்ற ஏழெட்டு மாதங்களில் ஓரிரு முறை தவிர்த்து அந்தப் பக்கம் போகும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவில்லை. வலிந்து தவிர்த்ததில் கடல் என்னை விட்டு வெகுதொலைவில் சென்றிருந்தது. மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு வார இறுதி நாளில் கடல் பார்த்தே ஆக வேண்டுமென வம்படியாய் என் பிரிய சினேகிதியை இழுத்துக் கொண்டு சென்றிருந்தேன். கடற்கரை யாருமற்று வெறிச்சென்றிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலரைத் தவிர வேறு யாருமேயில்லை. மழை காரணமாய் இருக்கலாம். கடற்கரை மணல் மழையீரத்தில் நசநசத்திருந்தது. நல்ல குளிர் காற்று. வெகுநேரம் நின்றபடியே கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
கடல் என்னோடு நேரடியாய் சம்பந்தப்பட்டிருப்பது இந்த மூன்று வருட காலமாகத் தான். அதுவும் இவ்வளவு சமீபமாய் கடல் எனக்கு வாய்க்குமென்று நினைத்து கூட இல்லை. இந்த நகர வாசத்திற்கு முன்பாகவெல்லாம் கடலென்பது ஒரு வசீகரக் கனவாகவே இருந்து வந்திருக்கிறது. கரை தொடும் முன்கடலை விட ஆழ்கடலின் மீதான ஈர்ப்பு எனக்கு மிக மிக அதிகம். கரையில் நின்று பார்க்கும் போதெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்குமொரு தொலைதூரப் புள்ளியில் கடலின் தன்மை எப்படியிருக்கும், அதன் அடியாழத்தில் வசிக்கும் மீன்கள், திமிங்கலங்கள் இன்னபிற கடல் ஜந்துக்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதுண்டு.
கடல் ஒரு வசீகரம். எதையும் யாரையும் சட்டென்று தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். வார்த்தைகள் ஏதுமற்று நிச்சலனமாய் இருக்கும் கணங்களிலெல்லாம் என் மனம் கடலின் மொழியை வெகு சீக்கிரத்தில் கிரகித்துக் கொள்ளும் தன்மையதாய் இருக்கிறது. சந்தோஷித்திருக்கும் தருணங்களிலெல்லாம் கடல்மொழி எனக்கு அவ்வளவாகப் புரிவதேயில்லை. இது ஏன் என்று பல சமயங்களில் யோசித்திருக்கிறேன்.
கடல் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் எதோவொன்றை எனக்குப் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறது. மனிதர்களை, மனங்களை, பிரியத்தை, பிரிவை, மரணத்தை ஒவ்வொரு முறையும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. கடல் ஒரு போதும் பயத்தை எனக்கு உணர்த்தியதேயில்லை. மாறாக ஒரு ஆச்சரியத்தை அதன் தவிப்பை தனிமையை உணர்த்தியிருக்கிறது. கடல் தன் தனிமையின் ஆற்றாமையை அலைகளின் மூலமாக பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறதோ என்றும் அவ்வப்போது நினைத்துக் கொள்வதுண்டு.
கடற்கரையின் ஈர மணல், என்றோ ஒருநாள் தன் தந்தையுடன் இதே கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தையை நினைவுபடுத்தியது. அன்று அக்குழந்தை ஆரஞ்சு நிறத்தில் ஃப்ராக் ஒன்றை அணிந்திருந்தது நன்றாக ஞாபகமிருக்கிறது. அதன் உடையின் முன்புறம் வெள்ளி நிறத்திலாலான பட்டையான ஜரிகையில் பூ போன்ற ஒரு சிறு முடிச்சிட்டிருந்தது. அக்காட்சியைப் பார்த்தபோதிருந்த அதே சந்தோஷம், அதே புன்னகை சட்டென்று ஒட்டிக் கொண்டது. சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஏன் முதன்முறை பார்த்தபோது கொடுத்த அதே உணர்வை பிறகு ஏன் கொடுப்பதில்லை, எதுவோ அவர்களை மாற்றிவிடுகிறதே, அது எது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
கடல் வசீகரம் என்றால் அலை அதன் உயிர்ப்பு. ஆளுயரத்திற்கு எழும்பும் அலைகளும் உப்பரிக்கும் காற்றும் இருந்திருக்காவிட்டால் கடலும் ஒரு பெரிய்ய்ய்ய குளம் அல்லது ஏரியைப் போன்ற ஒன்றாய் மட்டுமே இருந்திருக்க முடியும். ‘கடல்’ என்ற பெயர் கூட அதற்கு வாய்த்திருக்காது. காற்றிற்கும் அலைக்குமான உறவென்பது ‘இது இப்படித்தான்’ என்று வரையறுத்துக் கூற முடியாத ஒன்றாய் இன்று வரைக்கும் இருக்கிறது. கரை தழுவத் துடிக்கும் காற்றின் தவிப்பை அலை ஓயாமல் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அது தன் காதலனைச் சேரத் துடிக்கும் கன்னியொருத்தியை நினைவூட்டுகிறது. காற்றின் பிரியத்தை அலை மொழிபெயர்த்து கரைக்குச் சொல்லுகிறது. கேளாத செவியுடைய கரையோ மெளனமாகவே இருக்கிறது. இருந்தும் காற்று தன் பிரியத்தைத் தூதனுப்புவதை நிறுத்துவதேயில்லை. ஒவ்வொரு முறையும் கடலுக்கும் கரைக்கும் காற்றுக்கும் அலைக்குமான தொடர்பு ஒரு புள்ளியில் விரியத் தொடங்கி மீண்டும் அதே புள்ளியில் முடிந்து போகிறது. பிறகு மீண்டும் அதே புள்ளி அதே முடிவு. பிறகு மீண்டும்…
கடல் ஏராளமாய் அள்ளித்தருகிறது. ஆனால் கரையொதுங்கும் சிப்பியைப் பொறுக்கி சிரித்து சிந்தித்து சிலாகித்து அதை பத்திரப்படுத்திக் கொள்வதிலேயே கடலின் பெருமை முடிந்து போகிறது நமக்கு.
- சகாராதென்றல்

